Friday, August 22, 2014

தோட்டக்காரன்

தோட்டக்காரன்
விடிந்தும் விடியாத அதிகாலைப் பொழுது யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு எழுந்தேன். கசக்கிய கண்களுடன், வாசற் கதவை திறந்து வெளியே பார்த்தேன். ஒருவரும் இல்லை. வானம் மட்டும் லேசாக தூறிக் கொண்டிருந்தது. காற்று தான் கதவைத் தட்டியதோ என்று எண்ணியவாறே சுற்றிலும் நோட்டம் விட்டேன். யாரும் வந்து போனதற்கான அறிகுறி எதுவும் இல்லை. சிறிது நேரம் அங்கேயே நின்று எதிர்த்தாற் போல இருந்த மரத்தைப் பார்த்தேன். ஆஹா என்ன அழகு! கழுவினாற் போல் ஒரு அழகிய பச்சை நிறத்துடன் நின்றிருந்தது. இறைவனின் படைப்பில் எது தான் அழகு இல்லை?

மீண்டும் படுக்கப் பிடிக்காமல், காலைக் கடன்களை முடித்து விட்டு, குளித்து விட்டு பூஜை புனஸ்காரங்களை முடித்து அலுவலகத்திற்கு செல்ல தயாராகி இருந்தேன். சிறிது நேரத்தில் அருமை மனைவி, காலை சிற்றுண்டியுடன் வந்தாள். சாப்பிட்டு விட்டு அலுவலகம் வந்து சேர்ந்தேன்.

என் சக நன்பன் ஒருவன் அவனது மேஜையில் இருந்த ரோஜா செடியின் காய்ந்த இலைகளை கிள்ளி விட்டு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தான். அவன் பராமரிக்கும் விதத்தை வியந்து பார்த்தவாறே இருந்தேன். என் வீட்டின் முன் நின்றிருந்த மரத்தின் அதே கழுவிய பச்சை நிறம் இப்பொழுது அந்த செடியில் இருந்தது. சிறிது நேரம் நன்பனிடம் உரையாடி விட்டு என் மேஜைக்கு வந்து உட்கார்ந்தேன். என் கவனம் மீண்டும் அந்த மரத்தை சுற்றியே வந்தது. யார் அந்த மரத்துக்கு இலைகளை கிள்ளி விட்டு, தண்ணீர் விடுகிறார்கள்? என் மனம் விசுவரூபம் எடுத்து உலகெங்கும் பரவியது. இந்த மரம் மட்டும் இல்லை, மலைகளிலும், காடுகளிலும், ஆற்றோரங்களிலும் வளரும் மரங்களை யார் பராமரிக்கிறார்கள்?

இயற்கையா? இறைவனா?
யோசித்துப் பார்க்கிறேன், ஒன்றும் முடிவுக்கு வர முடியவில்லை. காற்றும் மலையும் தான் இலைகளை கிள்ளி விட்டு, தண்ணீர் ஊற்றுகிறதோ? என்ன தான் உரம் போடுகிறார்கள்? யார் போடுகிறார்கள்? யார் படைத்தார் இந்த காலங்களை? காற்றின் அசைவுகளை?
இறைவன் என்னும் தோட்டக்காரனோ?
அப்படி என்றால் "வறட்சி" என்பது என்ன? அவனின் சோம்பேறித்தனமா? புயல், வெள்ளம் என்பது அவனின் படைப்பு பிடிக்கவில்லை என்று அழிக்கும் விதம் தானோ? இது தான் அவன் பராமரிக்கும் விதம் என்றால், நாம் காண்பது அவனின் தோட்டத்தைத் தானே. அவன் தோட்டக்காரன் என்றால் அந்த தோட்டம், நாம் வாழும் உலகம் தானோ? அப்படி என்றால் அந்த தோட்டத்திற்கு யார் சொந்தக்காரன்?
இயற்கையா? இறைவனா?

தோட்டத்தின் பலனை அனுபவிப்பவன் தானே, அதன் சொந்தக்காரன். அப்படி என்றால், இந்த உலகை அனுபவிப்பவர்கள் நாம் தானே? ஆக நாம் தானே தோட்டத்திற்கு சொந்தக்காரர்கள். நாம் தோட்டத்தின் சொந்தக்காரன் என்றால் இறைவன் நம் தோட்டக்காரனோ?

நாம் யார்? இறைவன் யார்?

- வெங்கடேசன் செட்டியார்

ரிச்மண்டில் 2002ல் நடந்த இலக்கியப் போட்டியில் பங்கேற்ற படைப்புகளில் என்னைக் கவர்ந்த ஒன்று. இதை அவ்வப்போது படித்துக் கொண்டிருப்பேன். மற்ற படைப்புகளை இங்கே காணலாம்.

Monday, August 4, 2014

ரிச்மண்ட் தமிழ் சங்கம்: நிலவின் வண்ணம்

ரிச்மண்ட் தமிழ் சங்கம்: நிலவின் வண்ணம்: நிலவின் வண்ணம்

முடி யாது? முடியாது

நானும் ஒரு பேரு வச்சுக்கலாம்னு யோசிச்சு ஒரு பேரு கண்டு பிடிச்சு வச்சுக்கிட்டேன். பெயரைப் பற்றி அலசாமல் என் படைப்புகளை அலசவும்.

என் பேர் வேதாந்தி.

வேலை இல்லாதவன் தான் வேதாந்தம் பேசுவான். ஒரு வகையில் எனக்கும் அது பொருந்தும்.



முடி யாது? முடியாது. - அர்த்தம்


என் மகளுக்கு தான் முடி மேல் எவ்வளவு ஆசை.
முடி வெட்ட மறுக்கும் அவளுக்கும்
முடியாது என மறுக்கும் என் மனைவிக்கும் தான் தெரியும்.
இங்கே பிறந்தது என் வேதாந்தம்.
என்னால் முடிந்தது அவ்வளவு தான்
என் கொஞ்ச முடி மேல் ஆசையால் வேதாந்தம் எழுத ஆரம்பித்தேன்.
முடி மேல் யாருக்கு தான் ஆசை இல்லை
முடி சூடா மன்னருக்கும்
முடியே இல்லாத வழுக்கையருக்கும்
முடி யாது என்று எண்ணும் வேதாந்திக்கும்
முடியாது என்று மறுக்கும் என் மகளுக்கும்
வரலாறு சொன்னதோ முடியால் தொல்லை
முடியாத மொகலாயர் செய்தனர் கொலை
முடி யாது என்று ஆராய்ந்தால் இல்லை ஓர் எல்லை
முடி மேல் யாருக்குத்தான் ஆசை இல்லை
அன்று அரசன் தான் அலைந்தான் முடி சூட
இன்று அரசியல்வாதி அலைகிறான் முடி சூட
அன்றைய மங்கையர் முடிந்தால் முடி அழகு
இன்றைய மங்கையர் முடியாமல் முடி அழுக்கு
இது தான் இன்றைய இழுக்கு என்பார் வழக்கு பேசுபவர்
அது தான் இன்றைய இலக்கு என்பர் மறுசாரார்

ஒரு முடியை தேடினான் வராகன்
மறு முடியை தேடினான் நான்முகன்
முடியில் இருந்து விழுந்தாள் தாழ் முடியாள்
முடியை பார்த்தேன் என்றதால் இழந்தாள் முடியை
முடியால் எவ்வளவு தொல்லை

எனக்கோ எப்படி முடிப்பது என்பது தான் எல்லை
அதனால் முடிக்கிறேன் என் சொல்லை
உங்களுக்குத் தான் எவ்வளவு தொல்லை
முடியாது என்று சொல்லாமல் நீங்க்ளும்
முடி யாது என்று வேதாந்தம் பேச வாருங்கள் என்னுடன்.

 வேதாந்தி

நிலவின் வண்ணம்



நிலவின் வண்ணம்

நிலவே உன் வண்ணம் தான் என்னவோ?
நாளில் நீ இல்லை என்று கவிநயா
சொன்னதால் உன் நிறம் வெண்மையோ?
நாகு வானவில்லும் இல்லை என்றதால் நீ கருமையோ ?

அறிவியல் அறிங்கனோ உன்னில் பல வண்ணம் என்பார்
அருகில் சென்றவரோ நீ மஞ்சள் என்பார்
தொலைவில் நின்றவரோ நீ சாம்பல் என்பர்
இலக்கியமோ நீ களங்கம் என்று
குறை கூறியதால் நீ கரு வெண்மையோ

நிலவே உன் வண்ணம் தான் என்னவோ?
உன் வண்ணம் பார்க்கத் தானோ
என் தாய் உன்னை அருகில் அழைத்து
எனக்கு அமுதும் ஊட்டினாளோ

கவிஞரும் காதலரும் விரும்பும் உன்னை
ஓவியனும் மழலையும் விரும்பும் உன்னை
இந்த தமிழ் மன்றம் மறந்ததேனோ ?


கணினியில் பார்த்தால் உன் வர்ணம் தான் எத்தனை
அறிவியலும் உன் உலோக ஆடையால் தான்
உன் உடலும் சிலிர்ப்பதாக சொல்லுகிறதே
உன்னில் என்ன தான் உள்ளது?

நிலவே உன் வண்ணம் தான் என்னவோ
உள்ளத்தின் வண்ணம் தான் உன் வண்ணமோ
அதனால் தானோ என்னவோ உன்னை வெள்ளை என்கிறார் ?

நீ குறைந்தாலும் மறைந்தாலும் வளர்ந்தாலும்
உன் வண்ண எழில் காண எத்தனை குஷி

உன்னில் வண்ணம் தேடும் என்னை
உரைகல்லில் இடாமல் உன் வண்ணம் தன்னை
எனக்கு மட்டும் உரைப்பாயோ ?
நிலவே உன் வண்ணம் தான் என்னவோ ?

வேதாந்தி

சிரிப்பு

சிரிப்பு

என் தந்தை அழுவார் என்று எங்கள் கோமளவல்லி சொன்னால் கூட்டம் சிரிக்கிறது.
செந்தில் அழுதால் கவுண்டமணியுடன் சினிமா ரசிக்கிறது.
சில நேரம் நாம் அழ அழ சிரிக்க வைக்கிறார் ஆனந்த கண்ணீர் என்று
பிறர் அழ நாம் சிரிப்பதில் எத்தனை சந்தோசம் - இது காமெடி

பிறந்த குழந்தை அழுதால் தாய் சிரிக்கிறாள் சுகப்பிரசவம் என்று
குழந்தை அடித்து தாய் அழுதால் மழலை சிரிக்கிறது பாசாங்கு என்று
இதிலும் தான் எத்தனை சந்தோசம் - இது தாய்மை உணர்வு

குடிகாரன் சிரித்தால் குடும்பம் அழுகிறது
குடும்பஸ்தன் அழுதால் ஊரே சிரிக்கிறது
ஏழை அழ பணக்கரான் சிரிக்கிறான்
பணக்காரன் அழுதால் உலகம் சிரிக்கிறது
இதனை என்னவென்று சொல்ல --

பிறர் சிரித்து நாம் சிரித்தால் அது சிறப்பு
பிறர் அழ நாம் சிரித்தால் அது வெறுப்பு
குடும்பம் சிரிக்க நீ அழுதால் அது உழைப்பு
உலகம் சிறக்க நீ சிரித்தால் அது பொறுப்பு
உன் தாய் சிரிக்க நீ சிறந்தால் அதுவே உன் பிறப்பு.

வேதாந்தி

சூடா என்ன இருக்கு ?

சூடா என்ன இருக்கு ?


அய்யா பார்த்து சாப்பிடுப்பா , ரொம்ப சூடா இருக்கு. இப்படித் தான் நிறைய எச்சரிக்கைகள் .
எழுதும் சமயம் கூட இப்படி நிறைய எச்சரிக்கைகள்.
இதெல்லாம் பார்க்க முடியுமா?

ஏன்னா சூடான விஷயமாச்சே.
நாட்டில் ஒரு பக்கம் common wealth games பற்றிய செய்திகள்.
ஒரு பக்கம் வெள்ளம், ஒரு பக்கம் மண் சரிவு. ஒரு பக்கம் இலங்கை அரசு முதல்வரிடம் மன்னிப்பு கேட்குமா கேட்காதா? ஒரு பக்கம் மோடி அரசின் சாதனைகள். ஒரு பக்கம் டில்லியில் அடுத்த ஆட்சி அமைப்பது யாரு?
இப்படி பரபரப்பு இருக்க, இங்கே ரிச்மாண்ட்  தமிழ் சங்கத்தில் எழுதலாமா வேண்டாமா என்ற பரபரப்பு.

மக்களே! நீங்கள் மட்டும் பரபரப்பு இல்லாமல் எப்படி இருக்கிறீர்கள்?
உங்களுக்காக ஒரு கேள்வி. சூடான விஷயம் என்பதால் கொதித்து விடாதீர்கள்.
நாம் தமிழன் தானே, நமக்கு நடிகர்கள் தானே வழிகாட்டி . அதனால்
அடுத்த  "சூப்பர் ஸ்டார்" யார்? என்பது தான் இப்ப சூடான செய்தி.

ஏன்னா அவர் தான் அடுத்த முதல்வரை நிர்னயீக்க போகிறவர் !!!!

ஆமாம், சூப்பர் ஸ்டார் ஆகா இருக்கணும்னா என்ன தகுதி வேண்டும்?
மனிதாபிமானமா? நடிப்பு திறமையா? மேடைப் பேச்சா? அழகா? இல்லை எல்லா படமும் சூப்பர் ஹிட் ஆகணுமா? இல்லை என்றால் மேக்கப் இல்லாமல் நடிக்கணுமா?

எனக்கு ஒன்னும் விளங்க வில்லையே. அது சரி தேர்தலில் தகுதி பார்த்தா வாக்கு அளிக்கிறோம். அது மாதிரி இதையும் தேர்ந்து எடுத்து விட்டால் சரியப் போய்  விடும் .

நன்றாக  வரும் வரை ரசிகர் மன்றம் வச்சுக்க வேண்டியது, அப்புறம் எனக்கு அது தேவை இல்லை என்பது.
எது எப்படியோ என் மண்டையை குடைவது யார் சூப்பர் ஸ்டார் என்பது தான்.

உங்களின் வாக்கு படி நாம் அடுத்த சூப்பர் ஸ்டார் தேர்ந்து எடுப்போம்.

யார் யார் தகுதி ஆனவர்கள. எல்லா நடிகர்களும் தகுதி ஆனவர்கள்.
ஆமாம், இந்த மாதர் சங்கம் எல்லாம் எங்க போய்  விட்டது. இதில் பெண்களுக்கு உரிமை இல்லையோ ?
நாம் பெண்களை மதிப்பவர்கள். அதனால் நடிகைகளையும் களத்தில் இறக்கி விட வேண்டியது தான்.

மக்களே உங்கள் பொன்னான வாக்குகளையும், மறுமொழிகளின் மூலம் எங்களுக்கு தெரிய படுத்துங்கள்.
இல்லை என்றால் நாங்களே ஒரு குத்து மதிப்பா ஒரு ஆளை தேர்ந்து எடுத்து விடுவோம்.

என்னுடைய முதல் வாக்கு யாருக்கு என்பது அடுத்த பதிவில் தெரிவிக்கின்றனே.

இப்படிக்கு
வேதாந்தி ( இது வதந்தி இல்லை வேதாந்தி)